ரசிகர்கள் கவனத்தை இழுக்க, ஒருநாள் போட்டியை இப்படி மாற்றி அமைக்கலாம் : ரவி சாஸ்திரி யோசனை 

ravis4

20 ஓவர் கிரிக்கெட் வருகைக்கு பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி (50 ஓவர்) ஆகியவற்றின் மீது ரசிகர்கள் ஆர்வம் குறைந்துள்ளதாக கருதப்படுகிறது. இதையடுத்து டெஸ்ட் போட்டி மீதான ஆர்வத்தை அதிகரிக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

இதற்கிடையே ஒரு நாள் போட்டி மீது ரசிகர்கள் கவனத்தை இழுக்க இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி யோசனை தெரிவித்துள்ளார். '

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உயிர்பித்து இருக்க எதிர்காலத்தில் 40 ஓவர் ஆட்டங்களாக குறைக்கப் பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது ரசிகர்களின் கவனம் குறைந்து போவதை தடுக்கும். 1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது அது 60 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருந்தது.

பின்னர் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தற்போது 40 ஓவர்களாக குறைக்க வேண்டிய சரியான நேரம். காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி அடையுங்கள். வடிவமைப்பை குறையுங்கள். 20 ஓவர் கிரிக்கெட் முக்கியமானதுதான் என்று நினைக்கிறேன். இது விளையாட்டின் வளர்ச்சிக்கு தேவையானது.

ஆனால் இரு தரப்பு தொடர்கள் குறைக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் போதுமான உள்நாட்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. அந்த லீக் போட்டிகள் நடக்க அனுமதிக்க வேண்டும். அதன்பிறகு இடையில் ஒரு உலக கோப்பையை நடத்த வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Share this story