50 கோடி பார்வையாளர்களை கடந்து ஆர்சிபி VS சிஎஸ்கே போட்டி சாதனை.!

By 
rcpcsk

பிளே ஆஃப் சுற்றுக்கான முக்கியமான 68ஆவது லீக் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து வந்த டேரில் மிட்செல் 4 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், ரஹானே 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன்கள் எடுக்க போராடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா 37 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 61 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

ஷிவம் துபே 7 ரன்களில் நடையை கட்டினார். மிட்செல் சாண்ட்னர் 3 ரன்னில் ஆட்டமிழக்க கடைசியாக ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ். தோனி இருவரும் கூட்டணி சேர்ந்தனர். இதில், ஜடேஜா அதிரடியாக விளையாடினார். இந்தப் போட்டியில் சிஎஸ்கே 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் விளையாடி வந்தது. கடைசியாக 2 ஓவருக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19ஆவது ஓவரை பெர்குசன் வீசினார். இந்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 18 ரன்கள் எடுக்கப்பட்டது.

இறுதியாக கடைசி ஓவரில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 17 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தயாள் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடித்த நிலையில் 2ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷர்துல் தாக்கூர் 4ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. இதன் மூலமாக சிஎஸ்கே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. இதுவரையில் 8 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் தொடரிலிருந்து வெளியேறிய ஆர்சிபி 9ஆவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் தான் இந்தப் போட்டியை ஜியோ சினிமாவில் 50 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியை 38 கோடி, 28 கோடி, 26 கோடி, 25 கோடி, 25 கோடி, 24 கோடி, 24 கோடி, 24 கோடி, 23 கோடி, 23 கோடி என்று கோடிக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

Share this story