அணியில் இல்லாத போதும், டெஸ்ட் போட்டியை கண்டு ரசித்த ரிங்கு சிங்..

By 
hkhk

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது. இதைத் தொடர்ந்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இதில், டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம் பெற்று விளையாடினார்.

டி20 மற்றும் ஒருநாள் தொடரை முடித்த கையோடு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஆனால், ரிங்கு சிங் மட்டும் நாடு திரும்பவில்லை. அவர் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை டக்கவுட்டில் அமர்ந்து வேடிக்கை பார்த்துள்ளார். மேலும், பயிற்சியிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனினும், இந்திய அணி மீது, டெஸ்ட் தொடரில் இடம் பெற வேண்டும் என்ற அவர் மீதான ஆர்வத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், ரிங்கு சிங் இந்தியா ஏ அணியின் ஒரு அங்கமாக உள்ளார். அதோடு, தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார். இந்தப் போட்டியானது பெனோனியில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகத்தான் ரிங்கு சிங் முதல் நாள் நடந்த டெஸ்ட் போட்டியை டக்கவுட்டில் அமர்ந்து பார்த்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், அதிகபட்சமாக கேஎல் ராகுல் 70 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story