முக்கியமான போட்டியில் ரிஷப் பண்டிற்கு, ரூ.30 லட்சம் ஃபைன் – ஒரு போட்டியில் விளையாட தடை..

By 
pantf

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக தீவிரமாக விளையாடி வருகின்றன. இதில், ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எஞ்சிய 2 போட்டியிலும் சிஎஸ்கே தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு சென்றுவிடும்.

நாளை நடைபெற 62ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அதிக ரெட் ரன் ரேட் வித்த்தியாசத்தில் வெற்றி பெற்றால் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திற்கு முன்னேறும்.

இந்த நிலையில் தான் ஆர்சிபிக்கு எதிரான 62ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காலம்தாழ்த்தி பந்து வீசியதற்காக போட்டி சம்பளத்திலிருந்து ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், போட்டியில் இடம் பெற்று விளையாடிய இம்பேக்ட் பிளேயர் உள்பட ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் ரிஷப் பண்ட் விளையாடிய 12 போட்டிகளில் 3 அரைசதம் உள்பட 413 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 88* ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 31 பவுண்டரியும், 25 சிக்சரும் விளாசியுள்ளார்.

கடந்த சீசனில் காயம் காரணமாக இடம் பெறாத பண்ட், இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு விளையாடி வருகிறார். இதுவரையில் டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.

நாளை நடைபெற உள்ள போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடவில்லை என்றால், டேவிட் வார்னர் கேப்டனாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வார்னரும் விளையாடவில்லை என்றால் அக்‌ஷர் படேல் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பலமே ஓபனிங் பார்ட்னர்ஷிப் தான். இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பல போட்டிகளில் ஜாக் பிரேசர் மெக்கர்க் வெற்றி தேடிக் கொடுத்துள்ளார். இவரது அதிரடியான ஆட்டத்தால் டெல்லி முதல் பேட்டிங்கில் அதிக ரன்கள் குவித்து வெற்றி தேடியுள்ளது.

Share this story