ரோகித்-ராகுல் முதல் கூட்டணி : நியூசிலாந்தை தெறிக்க விட்ட கள விவரம்..

 Rohit-Rahul first alliance Field details of New Zealand's scattering ..

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது.

ராஞ்சியில் நடந்த இந்த ஆட்டத்தில், முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. இதனால், இந்தியாவுக்கு 154 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பிலிப்ஸ் 21 பந்தில் 34 ரன்னும் (ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), கப்தில் 15 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), மிச்சேல் 28 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர்.

ஹர்சல் படேல் 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், அக்‌ஷர் படேல், அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

முதல் முத்திரை :

பின்னர், ஆடிய இந்தியா 16 பந்து எஞ்சி இருந்த நிலையில் இலக்கை எடுத்தது. 

இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லோகேஷ் ராகுல் 49 பந்தில் 65 ரன்னும் (6 பவுண்டரி , 2 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 36 பந்தில் 55 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 13.2 ஓவரில் 117 ரன் எடுத்தனர். ரி‌ஷப் பண்ட் அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். சவுத்தி 3 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த வெற்றி மூலம் இந்தியா 2-0 இந்த கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே ஜெய்ப்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ரோகித் சர்மா-ராகுல் டிராவிட் கூட்டணி தங்களது முதல் தொடரிலேயே வென்று முத்திரை பதித்தது.

கூட்டு முயற்சி :

வெற்றி குறித்து, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது, 'ஒட்டுமொத்த வீரர்களின் கூட்டு முயற்சி மிகவும் சிறப்பாக இருந்தது. 

இந்த ஆடுகளத்தில் விளையாடுவது எளிதானது அல்ல. ஆனால், நாங்கள் எங்களை பயன்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.

நியூசிலாந்து அணியின் தரமான பேட்டிங் வரிசையால் நெருக்கடி இருந்தது. ஒரு விக்கெட் கைப்பற்றினால், பேட்டிங் வரிசையை உடைத்து விடலாம் என்று பந்துவீச்சாளர்களிடம் கூறினேன்.

சிறப்பு :

அஸ்வின், அக்‌ஷர் படேல் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. எங்களது சுழற்பந்து வீரர்களின் தரம் எங்களுக்கு தெரியும். அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதுதான் எனக்கு முக்கியம்.

தற்போதுள்ள இளம் வீரர்களை கொண்ட அணி ஆடி வருகிறது. அவர்கள் நிறைய போட்டிகளில் ஆடவில்லை. ஹர்சல் படேல் பலமுறை முதல்தர போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி உள்ளார். 

இதே மாதிரி இந்த போட்டியிலும், தனது திட்டத்தை செயல்படுத்தினார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது அவருக்கு தெரியும். அவர் மிகவும் திறமையான பந்துவீச்சாளர் ஆவார்' என்றார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் நாளை நடக்கிறது.

Share this story