600 சிக்ஸர்கள், 4000 ரன்கள்: டி20 கிரிக்கெட்டில் சாதிக்க காத்திருக்கும் ரோகித் சர்மா..

By 
t20wc2

இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா இன்னும் 3 சிக்ஸர்கள் அடித்தால் அனைத்து வடிவங்களிலும் 600 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

டி20 கிரிக்கெட் தொடர் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து நடத்தும் இந்த 9ஆவது தொடரில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நியூஸ்சிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 29 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு முன்னதாக வார்ம் அப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இந்தியா வார்ம் அப் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி 5ஆம் தேதி இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய 7 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

அயர்லாந்து அணிக்கு எதிராக ரோகித் சர்மா விளையாடிய 3 டி20 போட்டிகளில் 149 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 97 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 12 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடங்கும். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் தீபக் கூடா 151 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 3 ரன்கள் எடுத்தால் அவரது சாதனையை முறியடிப்பார்.

இதுவரையில் ரோகித் சர்மா விளையாடிய 151 டி20 போட்டிகளில் 3974 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 26 ரன்கள் எடுத்தால் 3ஆவது கிரிக்கெட் வீரராக 4000 ரன்களை கடந்து சாதனை படைப்பார். இதற்கு முன்னதாக விராட் கோலி 4037 ரன்களும், பாபர் அசாம் 4023 ரன்களும் எடுத்துள்ளனர். இதுவே ரோகித் சர்மா 37 ரன்களுக்கு அதிகமாக எடுத்தால் டி20 உலகக் கோப்பையில் 1000 ரன்களை கடந்த 3ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதற்கு முன்னதாக விராட் கோலி 1141 ரன்களும், மகீலா ஜெயவர்தனே 1016 ரன்களும் எடுத்துள்ளனர். மேலும், ரோகித் சர்மா விளையாடிய 472 சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 597 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசினால் சர்வதேச டி20 போட்டியில் 600 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.

நாளை நடைபெறும் போட்டியின் மூலமாக ரோகித் சர்மா 40ஆவது டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுகிறார். இதன் மூலமாக முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் 40 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார். இதற்கு முன்னதாக வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் 8 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ளார்.

ரோகித் சர்மா மட்டுமே 9ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார். நாளை நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றால் எம்.எஸ்.தோனியின் 41 வெற்றி சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார். இதற்கு முன்னதாக ரோகித் சர்மா கேப்டனாக விளையாடிய 54 டி20 போட்டிகளில் 41 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story