கேப்டன்ஸியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா..

By 
sharma3

தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை.

எப்படியும் இந்த டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்று இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் 32 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது.

இனிமேல் தொடரை கைப்பற்ற வாய்ப்பில்லாத நிலையில், தொடரை சமன் செய்ய வேண்டும் என்பதற்காக 2ஆவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி 3ஆம் தேதி கேப்டவுனில் 2ஆவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமனாகும். இந்தப் போட்டி டிரா செய்யப்பட்டாலும் அல்லது தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றாலும் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றிவிடும்.

தென் ஆப்பிரிக்காவில் 10 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 128 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இந்திய உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி அதிர்ச்சி கொடுத்தது. இதையடுத்து ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. 2ஆவது போட்டியில் தோல்வி அடைந்தால், ரோகித் சர்மாவின் கேப்டன்ஸி பறிக்கப்படும் நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. இதையெல்லாம் உணர்ந்த ரோகித் சர்மா தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். நேற்றைய பயிற்சியில் கேஎல் ராகுல், விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா என்று யாருமே பயிற்சியில் ஈடுபடவில்லை. ஆனால், ரோகித் சர்மா மட்டும் தனது பொறுப்பை உணர்ந்து தீவிரமாக வலைபயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

ரோகித் சர்மா உடன் ஷர்துல் தாக்கூர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் பயிற்சியை தொடங்கியிருக்கின்றனர். கேப்டவுன் பிட்ச் தன்மையை வைத்து ரோகித் சர்மாவிற்கு பந்து வீசப்பட்டுள்ளது. இதுவரையில் கேப்டவுனில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை. ஆதலால், 2ஆவது போட்டியில் வெற்றி பெற்று ரோகித் சர்மா தனது கேப்டன்ஸியை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story