முகமது ஷமிக்கு, ரோகித் சர்மா பாராட்டு : வந்துவிட்டது சர்ச்சை..
 

By 
Rohit Sharma praises Mohammad Shami

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

இதன் முதலாவது டெஸ்ட், செஞ்சூரியனில் கடந்த 26 ஆம் தேதி  தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற  இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

ஆல்-அவுட் :

‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில், இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்து இருந்தது. 

2-வது நாள் ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீச முடியாமல், ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், பரபரப்பாக நடந்த 3-ஆம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி 105.3 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 

இதைத் தொடர்ந்து, தங்கள் முதல் இன்னிங்க்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸ்சை ஆடிய இந்திய அணி, 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு, 16 ரன்கள் எடுத்து வலுவான முன்னிலையில் உள்ளது. 

5-வது இந்திய பந்து வீச்சாளர் :

இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 200 விக்கெட் (55 டெஸ்ட்) வீழ்த்திய 5-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். 

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் கபில்தேவ், ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா, ஜவஹல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு பிறகு, 200 விக்கெட் வீழ்த்திய வீரராக ஷமி திகழ்கிறார்.

200 விக்கெட் கைப்பற்றிய முகமது ஷமிக்கு, பல்வேறு கிரிக்கெட் நட்சத்திரங்கள் நேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
 
சிறப்பான எண் :

இந்நிலையில், ஷமி தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து, ரோகித் சர்மா தனது டுவிட்டர்  பக்கத்தில், '200 என்பது சிறப்பான எண்' என பதிவிட்டுள்ளார்.
*

Share this story