பாதுகாப்பையும் மீறி மைதானத்திற்குள் வந்து ரோகித் சர்மாவை தொட்டுச் சென்ற ரசிகர்: வைரலாகும் நிகழ்வு..

By 
fan

ஹைதராபாத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, பாதுகாப்பையும் மீறி மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர், அவரது பாதங்களை தொட்டுச் சென்ற நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதில், முதல் விக்கெட்டிற்கு ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஜோடி 55 ரன்கள் குவித்தது. டக்கெட் 35 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆலி போப் ஒரு ரன்னில் வெளியேற, ஜாக் கிராலி 20 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்தில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடி 88 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 70 ரன்கள் குவித்தார். பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் குவித்தது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 

இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில், ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஜெய்ஸ்வால் தொடக்க முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லியின் ஒரே ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசினார். அவரது ஓவரை மட்டும் குறி வைத்து அதிக ரன்கள் குவித்தார். ஹார்ட்லி வீசிய 9 ஓவர்களில் மட்டும் 63 ரன்கள் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில்தான் ரோகித் சர்மா ரன்னர் திசையில் இருந்தபோது விராட் கோலியின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்த ரசிகர் ஒருவர், பாதுகாப்பையும் மீறி மைதானத்திற்குள் புகுந்து ரோகித் சர்மாவின் பாதங்களை தொட்டுச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 27 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 24 ரன்களில் ஜாக் லீச் பந்தில் கேப்டன் பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 70 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 76 ரன்களுடனும், சுப்மன் கில் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

Share this story