19-வது ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து சென்றது சிறந்த முயற்சி: தோல்விக்கு பிறகு ருதுராஜ்..

By 
ruthuraj

நடப்பு ஐபிஎல் சீசனின் 18-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இது இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு 2-வது தோல்வியாக அமைந்துள்ளது. இந்தப் போட்டிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்...

“இந்த ஆடுகளம் நிதானமானதாக இருந்தது. எதிரணி பவுலர்கள் முதல் இன்னிங்ஸின் பிற்பாதியில் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். அதன் காரணமாக எங்களால் ரன் சேர்க்க முடியவில்லை. இன்னிங்ஸின் தொடக்கத்தில் நாங்கள் ரன் சேர்த்தோம். அதே நேரத்தில் நாங்கள் பந்து வீசிய போது பவர்பிளே ஓவர்களில் ரன்கள் அதிகம் கொடுத்துவிட்டோம். ஒரு கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்திருந்தோம். அதோடு ஒரே ஓவரில் அதிக ரன்கள் கொடுத்துவிட்டோம்.

இருந்தும் 19-வது ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து சென்றது சிறந்த முயற்சியாக பார்க்கிறேன். 170-175 ரன்கள் எடுத்தால் சரியாக இருக்கும் என கணித்திருந்தேன். மொயின் பந்தை திருப்பி அசத்தினார்” என ருதுராஜ் தெரிவித்தார்.

ஹைதராபாத் அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட் செய்திருந்தனர். சென்னை அணி சார்பில் ஷிவம் துபே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு சிஎஸ்கே வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறினர். முதல் இன்னிங்ஸில் 16 முதல் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 50 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சென்னை. ஹைதராபாத் வீரர் அபிஷேக் அதிரடி தொடக்கம் தராமல் போயிருந்தால் இதே பின்னடைவை அந்த அணியும் கடைசி ஓவர்களில் எதிர்கொண்டு இருக்க கூடும்.

Share this story