சாதனைப் பட்டியல் - சேவாக், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வரிசையில்.. யஷஸ்வி ஜெய்ஸ்வால்

By 
wal

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் 7ஆவது வீரராக இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. இதில் ரோகித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும், சர்ஃபராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்தனர். பின்னர், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில், பென் டக்கெட் மட்டுமே அதிகபட்சமாக 153 ரன்கள் குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசியாக இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 319 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலையில் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், ரோகித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழக்கவே யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 போட்டியில் விளையாடுவது போன்று அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.

ஜெய்ஸ்வல் 122 பந்துகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலமாக 13 இன்னிங்ஸ்களில் விளையாடி தனது 3ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். மேலும், சேவாக் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் வரிசையில் அதிவேகமாக 3 சதங்கள் அடித்த 7ஆவது வீரராக இடம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் 59 ரன்கள் எடுத்திருந்த போது இந்த சீரிஸில் 400 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஜெய்ஸ்வால் 80, 15 ரன்களும், 2ஆவது போட்டியில் 209, 17 ரன்களும் எடுத்துள்ளார்.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 10 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 104 ரன்களும் எடுத்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் ஆட்டமிழந்தார். இதுவரையில் நடந்த 3 போட்டிகளின் படி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மொத்தமாக 435 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

Share this story