முதல் முறையாக டிராபியை பெற்ற ஷ்ரேயாஸ் – ஐபிஎல் 2024 விருது, பரிசுத்தொகை வென்றவர்கள் பட்டியல்..

By 
20cr

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. மொத்தமாக 10 அணிகள் இடம் பெற்ற இந்த தொடரில் 70 லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு வந்தன.

இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எலிமினேட்டரில் வெளியேற, ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது குவாலிஃபையர் சுற்றில் வெளியேறியது. கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்தன.

சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பேட் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகள் எடுத்தார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். வைபவ் அரோரா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு குர்பாஸ் அகமது மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் இணைந்து வெற்றியின் விளிம்பு வரை சென்றது. அப்போது குர்பாஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 52 ரன்களும் எடுக்கவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியன் ஆனது.

இதைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வளர்ந்து வரும் வீரருக்கான விருது, ஃபேர்பிளே விருது, பர்பிள் கேப், ஆரஞ்சு கேப், மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது, 2ஆம் இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு விருதுகளும், பரிசு தொகையும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கடைசியாக சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூ.20 கோடிக்கான காசோலையும், ஐபிஎல் டிராபியும் வழங்கப்பட்டது.

ஷ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக ஐபிஎல் 2024 டிராபியை தனது கையால் தூக்கினார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி இருவரும் இணைந்து ஐபிஎல் டிராபியை வழங்கினர்.

ஐபிஎல் 2024 விருது, பரிசுத் தொகை வென்றவர்களின் முழு விவரம்:

எமர்ஜிங் பிளேயர் ஆஃப் தி சீசன் – நிதிஷ் குமார் ரெட்டி – ரூ.10 லட்சம்

ஃபேர்பிளே விருது – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பர்பிள் கேப் வின்னர் – ஹர்ஷல் படேல் (24 விக்கெட்டுகள்) – புவனேஷ்வர் குமார் பெற்றுக் கொண்டார். ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

ஆரஞ்சு கேப் – விராட் கோலி (741 ரன்கள், ரூ.10 லட்சம்) – ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றுக் கொண்டார்.

மதிப்புமிக்க வீரர் – சுனில் நரைன் (488 ரன்கள் மற்றும் 17 விக்கெட்டுகள்), ரூ.10 லட்சம்

பிட்ச் மற்றும் கிரவுண்ட் விருது – ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் – ரூ.50 லட்சம்

ஐபிஎல் 2024 2ஆவது இடம் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ.12.5 கோடி வழங்கப்பட்டது. பேட் கம்மின்ஸ் ரூ.12.5 கோடிக்கான காசோலையை பெற்றுக் கொண்டார்.

ஐபிஎல் 2024 சாம்பியன் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஷ்ரேயாஸ் ஐயர் வெற்றி பெற்றதற்கான ரூ.20 கோடிக்கான காசோலையை பெற்றுக் கொண்டார். ஐபிஎல் டிராபியும் வழங்கப்பட்டது.

Share this story