உலகக்கோப்பை அணியில், சூர்யகுமாருக்கு பதில் 'அவரை' மிடில் ஆர்டரில் ஆட வைத்து இருக்கலாம்: ரசிகர்கள் கருத்து 

By 
world cub 1

இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய முதல் டி20 போட்டியில் இஷான் கிஷன் ஆடிய ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டு முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் எட்டாவது ஓவரின் முடிவில் இந்தியா சற்று பின்தங்கி இருந்தது. ஆனால், ஒன்பதாவது ஓவரில் அதிரடியாக இரண்டு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து போட்டியின் போக்கையே மாற்றினார் இஷான் கிஷன். அதுவரை ஸ்ட்ரைக் ரேட்டில் நூறை தாண்டாத இஷான், அந்த ஓவருக்கு பின் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மாறி, தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி 39 பந்துகளில் 58 ரன்கள் குவித்த பின்னரே ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 208 ரன்கள் குவித்தது. போட்டி நடந்த விசாகப்பட்டினம் மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. அதனால், இந்திய அணியால் 208 ரன்கள் இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. துவக்க வீரர் ருதுராஜ் டக் அவுட் ஆன போதும், மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்தார்.

அப்போது இஷான் கிஷன் நிதான ஆட்டம் ஆடி வந்தார். 2 விக்கெட் இழந்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் களத்துக்கு வந்தார். அவர் அதிரடி ஆட்டம் ஆட, இஷான் கிஷன் ஒரு கட்டத்தில் 12 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். எட்டாவது ஓவரின் முடிவில் அவர் 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து இருந்தார்.

அப்போது இந்தியா 79 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. ஓவருக்கு 10 - 11 ரன்கள் அடித்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில், அப்போது ரன் ரேட் சரியாக 10க்கு கீழே சென்றது. இன்னும் ஒரு ஓவர் இந்தியாவை ரன் குவிக்க விடாமல் செய்தால் அழுத்தம் அதிகரித்து இந்திய அணி தோல்வி அடையும் என ஆஸ்திரேலியா திட்டமிட்டது.

சுழற் பந்துவீச்சாளர் தன்வீர் சங்கா தன் முதல் ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்த நிலையில், அவரை மீண்டும் ஒன்பதாவது ஓவரை வீச அழைத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட். ஆனால், அந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து மொத்தம் 19 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார் இஷான் கிஷன். அந்த ஓவருக்கு பின் இந்தியாவின் ரன் ரேட் தொடர்ந்து பத்துக்கு மேல் தான் இருந்தது.

இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க நினைத்த, ஆஸ்திரேலியா அணிக்கு அந்த ஓவருக்கு பின் அழுத்தம் அதிகரித்தது. அதை தக்க வைத்த இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இஷான் கிஷன் 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் 42 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் சொதப்பினார். ஆனால், டி20யில் சிறப்பாக ஆடி இருக்கிறார். ஆனால், இஷான் கிஷன் ஒருநாள் போட்டிகளில் எப்படி ஆட வேண்டுமோ, அதே போன்ற ஆட்டத்தை டி20 போட்டியிலும் ஆடி இருக்கிறார்.

இந்த ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இஷான் கிஷன் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று இருந்த நிலையில், சூர்யகுமாருக்கு பதில் அவரை மிடில் ஆர்டரில் ஆட வைத்து இருக்கலாம். எப்போது நிதான ஆட்டம் ஆட வேண்டும், எப்போது அதிரடி ஆட்டம் ஆட வேண்டும் என சரியாக தீர்மானித்து ஆடி இருப்பார் என கூறி வருகின்றனர்.
 

Share this story