டி20 உலகக் கோப்பை – அமெரிக்கா புறப்பட்ட ரோகித் சர்மா அண்ட் கோ – ஹர்திக், கோலி செல்லவில்லை – காரணம்..?

By 
t20wc

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது வரும் ஜூன் 1 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நெதர்லாந்து, நேபாள், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பப்புவா நியூ கினியா, உகாண்டா, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், அயர்லாந்து என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

இந்த தொடருக்கான இந்திய அணியில், ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

மேலும், ரிசர்வ் வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரு 5 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.

ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இடம் பெற்ற 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிவுக்கப்பட்டு விளையாடுகின்றன. அதில்,

குரூப் ஏ - இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா.

குரூப் பி – இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்

குரூப் சி – வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நியூசிலாந்து

குரூப் டி – தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாள்.

இந்தியா விளையாடும் போட்டிகள்:

ஜூன் 5 – இந்தியா – அயர்லாந்து – நியூயார்க்

ஜூன் 9 – இந்தியா – பாகிஸ்தான் – நியூயார்க்

ஜூன் 12 – இந்தியா – அமெரிக்கா – நியூயார்க்

ஜூ 15 – இந்தியா – கனடா – புளோரிடா

குரூப் ஏ பிரிவில் சுற்றில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அதன்படி ஒவ்வொரு குரூப்பிலிருந்து மொத்தமாக 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இந்த 8 அணிகளும் 4 அணிகள் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மற்ற 3 அணிகளுடன் ஒரு போட்டியில் விளையாடும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதில், தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் தான் இந்த தொடரில் இடம் பெற்ற இந்திய அணி வீரர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கின்றனர். முதலில் மும்பையிலிருந்து துபாய் சென்று பிறகு அங்கிருந்து நியூயார்க் புறப்பட்டுச் செல்கின்றனர்.

இதில், முதல் பிரிவினர் நேற்று மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதில் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், சுப்மன் கில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட், பீல்டிங் பயிற்சியாளர் திலீப், சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், அக்‌ஷர் படேல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் தவிர சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆவேஷ் கான் ஆகியோர் உள்பட மற்றவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அமெரிக்கா புறப்படுகின்றனர். ஆனால், இந்திய அணியின் துணை கேப்டனான ஹர்திக் பாண்டியா ஏற்கனவே லண்டன் சென்றுள்ளார் அங்கு சில நாட்கள் பயிற்சிக்கு பிறகு இந்திய அணியுடன் இணைவார் என்று சொல்லப்படுகிறது.

இது ஒரு புறம் இருந்தாலும், ஹர்திக் பாண்டியா தனது மனைவி உடனான பிரிவு காரணமாக அங்கு இந்திய அணியுடன் அமெரிக்கா செல்லவில்லை என்றும், இன்னும் ஓரிரு நாட்களுக்கு பிறகு அமெரிக்கா புறப்பட்டுச் செல்வார் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, விராட் கோலி ஆவணங்கள் பிரச்சனை காரணமாக நேற்று அணியுடன் செல்லவில்லை. இந்த மாத இறுதிக்குள்ளாக ஆவணங்கள் பிரச்சனை சரி செய்யப்பட்டு அமெரிக்கா புறப்பட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story