இளம் வீரர் குகேஷுக்கு ரு.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..

By 
kugesh2

கனடா நாடு, டொரண்டோவில் நடைபெற்ற FIDE Candidates தொடரில் இளம் செஸ் வீரர் குகேஷ் தனது 17 வயதில், 'சேலஞ்சர்'-ஆக வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றியை முதல் வீரராக அவர் சாதித்துள்ளார். அவர் தனது 12 வது வயதிலேயே இளம் கிராண்ட் மாஸ்டராக தகுதி பெற்றவராவார்.

இளம் வீரராக வரலாறு படைத்த அவர் நேற்று சென்னை வந்தடைந்தடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இன்று தனது முகாம் அலுவலகத்திற்கு அழைத்து குகேஷை பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஏற்கனவே இப்போட்டியில் பயிற்சி பெறுவதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.15 இலட்சம் அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலக செஸ் சாம்பியன் ஷிப்புக்கான போட்டியிலும் அவர் வெற்றி வாகை சூடிட முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குகேஷ் கூறுகையில், “தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களை பல்வேறு வகைகளில் ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும், பயிற்சி பெறும்போது ஊக்கத்தொகையும் மற்றும் போட்டி முடிந்த பிறகு பரிசுத்தொகையும் உடனடியாக வழங்கியது மிகவும் மகிழ்ச்சியும், ஊக்கமும்  அளிக்கிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் எனக்கு பயிற்சி அளித்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதனால் தான், என்னால் தற்போது இந்த சாம்பியன் ஷிப் பட்டம் வெல்ல முடிந்தது.” என்று கூறி நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “மிக இளம் வயதில் FIDE Candidates தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.  கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்.

இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்.” என பதிவிட்டுள்ளார்.

Share this story