டென்னிஸ் உலகம் : முதல் சுற்றில் தோல்வி - வெளியேறிய ரஃபேல் நடால்..

By 
nadal9

நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வியை தழுவி ரஃபேல் நடால் வெளியேறியுள்ளார். இந்த தொடரில் இப்படி முதல் சுற்றோடு அவர் வெளியேறியது இதுவே முதல்முறை.

37 வயதான நடால், இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் 14 பட்டங்கள் பிரெஞ்சு ஓபன் தொடரில் வென்றதாகும். சுமார் 20 ஆண்டு காலம் களிமண் களத்தில் தனது ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தியவர். கடைசியாக கடந்த 2022-ல் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றிருந்தார்.

காயம் காரணமாக இதுவே அவர் பங்கேற்று விளையாடும் கடைசி டூராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு அவர் இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை எதிர்த்து நடால் ஆடினார். திங்கள்கிழமை அன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 7-6(5), 6-3 என்ற கணக்கில் அவர் தோல்வியை தழுவினார்.

இதற்கு முன்னர் பிரெஞ்சு ஓபன் தொடரில் ஜோகோவிச் மற்றும் ராபின் ஆகிய இருவர் மட்டுமே நடாலை வீழ்த்தி இருந்தனர். தற்போது மூன்றாவது நபராக அந்தப் பட்டியலில் ஸ்வெரேவ் இணைந்துள்ளார். நடால் முதல் சுற்றோடு வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Share this story