டெஸ்ட் மேட்ச் ஸ்டார்ட் : இதுவரை தோற்காத இந்திய அணி, இதிலும் தெறிக்க விடுமா?

Test Match Start Will the Indian team, which has not lost so far, be able to shine in this too

தென்ஆப்பிரிக்காவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 

இதில், செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை சாய்த்து முத்திரை பதித்தது. 

செஞ்சூரியனில் வெற்றியை பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றது.

தீவிர பயிற்சி :

இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் ஸ்டேடியத்தில் நாளை (திங்கட்கிழமை) இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 

இதுவும் முழுமையாக வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கக்கூடிய ஆடுகளம் தான். 

இதையொட்டி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

கடந்த 30 ஆண்டுகளாக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று விளையாடி வரும் இந்தியாவுக்கு அங்கு ராசியான ஒரு மைதானம் எது என்றால் ஜோகன்னஸ்பர்க் தான். 

இங்கு, இந்திய அணி ஒரு போதும் தோற்றது கிடையாது. சொல்லப்போனால், இந்த மைதானத்தில் தோல்வியே காணாத ஒரே அணி இந்தியா தான். 

இதுவரை ஆடிய ஆட்டம் :

இங்கு இதுவரை 5 டெஸ்டுகளில் ஆடியுள்ள இந்தியா, அதில் 2-ல் வெற்றியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது.

முதலாவது வெற்றி 2006-ம் ஆண்டு கிடைத்தது. ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. 

இதில், முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவை இந்திய பவுலர்கள் 84 ரன்னில் சுருட்டி மிரட்டினர். 

இதுதான் தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்தியாவின் முதல் வெற்றியாகவும் அமைந்தது. மொத்தம் 8 விக்கெட்டுகள் அள்ளிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

2-வது வெற்றி 2018-ம் ஆண்டு விராட் கோலியின் தலைமையில் கிடைத்தது. 

இந்த டெஸ்டில் இந்தியா நிர்ணயித்த 241 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா 177 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 

இந்திய தரப்பில் சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், புஜாரா, விராட் கோலி ஆகியோர் இங்கு சதம் அடித்துள்ளனர்.

தென்ஆப்பிரிக்க அணி இந்த மைதானத்தில் 42 டெஸ்டுகளில் விளையாடி 18-ல் வெற்றியும், 13-ல் தோல்வியும், 11-ல் டிராவும் சந்தித்துள்ளது. இங்கு கடைசியாக நடந்த 20 டெஸ்டுகளில் 19-ல் முடிவு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு :

இந்த டெஸ்டில், இந்தியா வாகை சூடினால், முதல்முறையாக தென்ஆப்பிரிக்காவில் தொடரை வென்று வரலாறு படைத்து விடும். 

மேலும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் (9-வது வெற்றி) என்ற சிறப்பை விராட் கோலி பெறுவார். 

போட்டியில் களம் இறங்க மிகுந்த ஆர்வமுடன் காத்திருப்பதாக கோலி கூறியுள்ளார்.
*

Share this story