இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், இங்கிலாந்துக்கு சவாலாக இருக்கும்: பயிற்சியாளர் மெக்கல்லம் கருத்து

By 
mac1

இங்கிலாந்து அணி, அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. ஜனவரி 25-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட்,ராஞ்சி, தரம்சாலா மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கூறியதாவது:

இந்தியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இங்கிலாந்து அணியின் பேட்டிங் அணுகுமுறையை ‘பாஸ்பால்' முறை மாற்றியுள்ளது. போட்டியில் வெற்றியோ, தோல்வியோ அதைப் பொருட்படுத்தாமல் எங்கள் அணி ‘பாஸ்பால்’அணுகுமுறையைத் தொடரும்.

தாக்குதல் ஆட்டத்திறனான 'பாஸ்பால்' அணுகுமுறையால் கடந்த சில தொடர்களாக இங்கிலாந்து அணியின் ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் இங்கிலாந்தின் ஆக்ரோஷ ஆட்டம் தொடரும்.'பாஸ்பால்' அணுகு முறையிலிருந்து நாங்கள் மாறமாட்டோம்.

இந்திய ஆடுகளங்களில் பந்துகள் அதிகம் திரும்பும். அதைப்பற்றி நாங்கள் கவலைப் படப்போவதில்லை. இங்கிலாந்து அணியின் 'பாஸ்பால்' அணுகுமுறையை தொடர்ந்து இந்தத் தொடரிலும் செயல்படுத்துவோம். இந்தியாவில் நடைபெறும் இந்தத் தொடர்இங்கிலாந்து அணிக்கு நிச்சயம் சவாலாக இருக்கப் போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் செயலாற்றுவதற்காக நான் உற்சாகமாக இருக்கிறேன். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணிகளுள் ஒன்றாக இந்திய அணி இருக்கிறது. எனவே, அந்த அணிக்கெதிரான எங்களது அணுகுமுறையை சோதித்துப் பார்க்க நாங்கள் விரும்புகிறோம்.இந்தத் தொடரில் வெற்றி பெற்றால் நாங்கள் உற்சாகமாக இருப்போம். ஒருவேளை தோல்விகண்டால், அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை.

நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட்டை விளையாடுகிறோம். எங்களால் முடிந்தவரை கிரிக்கெட்டில் சிறந்து விளங்க முயற்சி செய்ய விரும்புகிறோம். நாங்கள் சில தொடர்களில் உடனடி வெற்றிகளைப் பெற்றதால் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் அதுவே எங்கள் அணியின் உச்சபட்ச வெற்றி என்று நான் நினைக்கவில்லை.

எனது முதல் ஐபிஎல் போட்டியில் 73 பந்துகளில் 158 ரன்கள்குவித்தேன். அன்றைய தினத்தில் களத்தில் பயப்படாமல் விளாசினேன். இந்த வகை தாக்குதல் ஆட்டம் ‘பாஸ்பால்' அணுகுமுறையிலான ஆட்டம்தான். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story