பங்காளிகளின் தோல்விக்கு காரணம் அதுதான்: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வின் 

 

By 
asw2

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் அணிகள் எது ஓரளவு ரசிகர்கள் கணித்துள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்று பார்க்கப்படுகிறது.

இதுவரை பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்வி என்று 4 புள்ளிகளுடன் உள்ளது. இதனால் அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றாலும் கூட மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை வைத்து அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பு இருக்கும். ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட அணிகளுக்கு கடும் சவாலளித்த பாகிஸ்தான் அணி இந்தியாவில் சொதப்புகிறது.

அதில் சுழலுக்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை தழுவியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், பாகிஸ்தான் அணியில் உள்ள 2 வீரர்களை தவிர்த்து வேறு எந்த வீரர்களும் இந்திய ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இல்லை.

ஹாரிஸ் ராஃப், ஷதாப் கான் உள்ளிட்ட வீரர்கள் சொதப்புவதற்கு காரணமும் அதுதான். எந்த லைன் மற்றும் லெந்தில் வீசினால் சரியாக இருக்கும் என்பதை பாகிஸ்தான் வீரர்கள் அறிந்து கொள்வதில் சிரமம் உள்ளது. உடனடியாக ஒரு வீரர் ஆடுகளங்களுக்கு ஏற்ப மாறுவது சிரமம் தான். பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ஐபிஎல் அனுபவம் கூட இல்லை.

ஆனால் டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் ஐதராபாத் மைதானத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நான் கூட ஐதராபாத் மைதானத்தில் 5 முதல் 6 போட்டிகளில் தான் விளையாடி இருப்பேன். ஆனால் ஐதராபாத் மைதானம் டேவிட் வார்னருக்கு சொந்த மைதானம் போல் அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார்.

இதனால் பாகிஸ்தான் அணி புதிய சூழலால் தான் திணறுகிறது என்று நினைக்கிறேன். இந்திய ஆடுகளங்களில் வீசினால் அனைத்து லெந்தில் ஸ்பின் ஆகாது. சரியான லைன் மற்றும் லெந்தில் வீசினால் தான் ஸ்பின்னாகும். அதனால் முதல்முறையாக இந்திய மண்ணில் விளையாடும் பாகிஸ்தான் அணி திணறுவதில் ஆச்சரியமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Share this story