அடிப்படை விலையோ ரூ.10 லட்சம், ஏலம் எடுக்கப்பட்டதோ ரூ.1.3 கோடி: யார் இந்த விருந்தா தினேஷ்?

By 
virunda

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான ஏலத்திற்கு மட்டும் 165 வீராங்கனைகள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். ஆனால், இதிலிருந்து வெறும் 9 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 30 வீராங்கனைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்படுகின்றனர். 

சரியாக 3 மணிக்கு மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் தொடங்கியது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தொடக்க உரையாற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 2ஆவது முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார்.

இந்த ஏலத்தில் முதல் வீராங்கனையாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஃபோப் லிட்ச்ஃபீல்டு ரூ.1 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இந்த நிலையில் தான், விருந்தா தினேஷ் ரூ.1.3 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவருடைய அடிப்படை விலை என்னவோ ரூ.10 லட்சம் தான். ஆனால், யுபி வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக ரூ.1.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி, குஜராஜ் ஜெயிண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் என்று 3 அணிகளும் கர்நாடகாவைச் சேர்ந்த 22 வயதான விருந்தா தினேஷை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனியர் மகளிர் ஒரு நாள் போட்டி டிராபி இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றினார். இவர், விளையாடிய 11 இன்னிங்ஸ்களில் 477 ரன்கள் எடுத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 81 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக, ஹாங்காங்கில் நடந்த இந்தியாவின் அண்டர் 23 ஏசிசி வளர்ந்து வரும் அணிகள் டிராபிக்கான அணியில் விருந்தா தினேஷ் இடம் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், எஸ் யஷஸ்ரீ காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக இந்தியா ஏ அண்டர் 23 அணியில் இடம் பெற்று விளையாடினார்.

ஏசிசி மகளிர் டி20 வளர்ந்து வரும் அணிகள் ஆசிய கோப்பைக்கான அண்டர் 23 இந்தியா ஏ அணியில் இடம் பெற்ற விருந்தா தினேஷ் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக விளையாடி 29 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 36 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி 20 ஓவரிகளில் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து விருந்தா தினேஷ் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ரூ.1.3 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story