சர்வதேச கிரிக்கெட் போட்டியில், முதல் திருநங்கை ஆட்டம்..

* கனடாவின் தேசிய மகளிர் அணியில் இடம் பெற்றுள்ள டேனியல் மெக்காஹே சர்வதேச கிரிக்கெட்டில் முதல் திருநங்கை என்ற சாதனையை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் இம்மாதம் 4 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டியில் இவர் களமிறங்க உள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்காஹே கடந்த 2020-ல் அந்த நாட்டிலிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்தார். 2021-ல் தனது பாலினத்தை ஆணிலிருந்து பெண்ணாக மாற்றிக் கொண்டார்.
* 12 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமான கிரிக்கெட் வீராங்கனை மஹிகா கவுர். இவர் 12-வது வயதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக முதல் முறையாக அறிமுகமானார். அவர் அந்த அணிக்காக 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது முறையாக அறிமுகமாகி உள்ளார். ஆனால் இந்த முறை இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகியுள்ளார். இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் மஹிகா கவுர் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 186 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 6 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 55 எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் மீண்டும் தொடங்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான மஹிகா கவுர் தனது முதல் சர்வதேச விக்கெட்டையும் இந்த போட்டியின் மூலம் கைப்பற்றினார்.