வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் 95 வயதில் காலமானார்..

By 
rav11

முன்னாள் இந்திய அணியின் கேப்டனான தத்தாஜிராவ் கெய்க்வாட் வயது முதிர்வு காரணமாக பரோடாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம்  காலமானார்.

குஜராத் மாநிலம் பரோடாவில் பிறந்தவர் தத்தாஜிராவ் கெய்க்வாட். கடந்த 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி பிறந்த இவர், 1952 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். முதல் முறையாக 1952 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1961 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி விளையாடினார்.

கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டுகள் வரையில் தத்தாஜிராவ் கெய்க்வாட் வெறும் 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இதில், மொத்தமாக 350 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு முறை மட்டுமே அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்துள்ளார்.

கடந்த 1959 ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்தது. அந்த அணிக்கு முதல் முறையாக கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அப்போது அவருக்கு டைஃபாய்டு காய்ச்சல் ஏற்படவே அந்த தொடரை அவரால் மேற்கொண்டு தொடர முடியவில்லை.

இந்தியாவின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான தத்தாஜிராவ் கெய்க்வாட் ரஞ்சி டிராபியில் 14 சதங்கள் உள்பட 3,139 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் தற்போது 95 வயதாகும் தத்தாஜிராவ் கெய்க்வாட், பரோடாவில் உள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பிசிசிஐ எக்ஸ் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளது.

இது குறித்து, பிசிசிஐ எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட் மறைவிற்கு பிசிசிஐ இரங்கலை தெரிவித்துள்ளது. 1959 இல் இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அணியை வழிநடத்தினார். அவரது தலைமையின் கீழ், பரோடா 1957-58 சீசனில் ரஞ்சி டிராபியையும் வென்றது. கெய்க்வாட்டின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வாரியம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this story