ஜடேஜா, ராகுல் கிடையாது; 3 வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்த பிசிசிஐ: யார் யார் தெரியுமா?

By 
tbtb

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் இருவரும் விலகியதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின் போது ரவீந்திர ஜடேஜாவிற்கு தசைபிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தான் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் விலகியுள்ளனர். ஜடேஜாவிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் விலகியுள்ளார். மேலும், கேஎல் ராகுலுக்கு வலது காலின் தொடைப் பகுதியின் தசை நார் பகுதியில் வலி ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விலகியுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும், இருவரது முன்னேற்றத்தையும் பிசிசிஐ மருத்துக் குழு கண்காணித்து வருகிறது. இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான், சௌரப் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 3 மற்றும் 4ஆவது 3 நாட்கள் கொண்ட போட்டிக்கான இந்திய ஏ அணியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக சரன்ஸ் ஜெயின் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆவேஷ் கான் தொடர்ந்து ரஞ்சி டிராபி தொடரில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடுவார். தேவைப்படும்போது டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் 86 மற்றும் 22 ரன்கள் குவித்தார். இதே போன்று ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் மற்றும் 2 ரன்கள் என்று சேர்த்திருந்தார். ஏற்கனவே விராட் கோலி இல்லாத நிலையில் தற்போது கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சௌரப் குமார்.

Share this story