இது ஆர்சிபி அணியின் புதிய அத்தியாயம் : விராட்கோலி எழுச்சி..

By 
vava2

நடப்பு ஐபிஎல் சீசனில் நாளை மறுதினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சீசனின் தொடக்கப் போட்டியில் விளையாட உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த சூழலில் அந்த அணியின் அன்பாக்ஸ் நிகழ்வில் கோலி உட்பட அணியின் அனைத்து வீரர்களும் பங்கேற்றனர். இதில் கோலி கன்னட மொழியில் பேசி அசத்தினார்.

கடந்த 16 சீசன்களாக ஐபிஎல் அரங்கில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாத அணியாக ஆர்சிபி உள்ளது. இந்த முறை அந்த அணி கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்த அன்பாக்ஸ் நிகழ்வில் ஆர்சிபி அணியின் புதிய ஜெர்ஸி மற்றும் இந்த சீசனில் விளையாட உள்ள வீரர்கள் அனைவரும் இணைந்து குழு படம் எடுத்துக் கொண்டனர்.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் கோலி பேச வந்தபோது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் விண்ணை தாண்டும் அளவுக்கு ஆரவாரம் செய்து அவர் வரவேற்றனர். அவர்களை அமைதியாக இருக்குமாறு சொல்லி கோலி பேசினார். “இது ஆர்சிபி அணியின் புதிய அத்தியாயம்” என அவர் கன்னடத்தில் பேசி கவனம் ஈர்த்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமான கோலி மிஸ் செய்தார். கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியர் இரண்டாவது குழந்தையை வரவேற்றது இதற்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அவர் களம் திரும்பி உள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர், 16 சீசன்களாக ஒரே அணிக்காக விளையாடிய வீரர் என குறிப்பிடத்தக்க சாதனைகளை தன் வசம் கோலி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற அணியின் பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றப்பட்டுள்ளது.

Share this story