இது, எனக்கு கிடைத்த மிகவும் விலையுயர்ந்த பதக்கம்: ரவி சாஸ்திரி பெருமிதம்

By 
nana1

ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்து வருகிறது. 

கடந்த 2006-07 ஆம் ஆண்டுகளில் முதல் முறையாக பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டது. சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது முதன் முதலில் 1994 இல் வழங்கப்பட்டது. இது ஒரு முன்னாள் வீரருக்கு பிசிசிஐ வழங்கும் மிக உயர்ந்த கௌரவமாக பார்க்கப்படுகிறது.

இந்த விருது தற்போது ரவி சாஸ்திரிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2006-07 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பிசிசிஐ விருதுகள் கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2020 முதல் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ இன்று விருது வழங்கியது.

இதில், வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர் ரவி சாஸ்திரி. 

80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உள்பட 3830 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 206 ரன்கள் அடங்கும். இதே போன்று 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 18 அரைசதங்கள் உள்பட 3108 ரன்களும் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 109 ரன்கள் அடங்கும்.

அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவர், பயிற்சியாளராக இருந்த போது இந்திய அணி 2019ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் 2021ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியது.

இதையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரி விலகினார். அதன் பின் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தான் பிசிசிஐயின் சார்பில் ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

இந்த விழாவின்போது பேசிய ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது தான் எனக்கு கிடைத்த மிகவும் விலையுயர்ந்த பதக்கம்.

கப்பா டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரிஷப் பண்ட் என்று கூறும் போதே கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். கப்பா டெஸ்ட் போட்டி வெற்றியை பெற்றுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். அதன் பிறகு விருது வென்ற அனைவரும் ஒன்றாக இணைந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Share this story