இந்த எண்ணம்தான் வீழ்ச்சிக்குக் காரணம்: சேவாக் விமர்சனம்..

By 
wag

2023 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து அணி தோல்வி அடைந்து, ஒரே ஒரு வெற்றியைத்தான் பெற்றுள்ளது. இனிமேலும் வெற்றி பெறும் என்பது போல் அவர்களது ஆட்டம் இல்லை.

இந்நிலையில், இங்கிலாந்து அணி மிக மிக சாதாரணமான அணி, சப்பையான அணி என்று விரேந்திர சேவாக் கேலி செய்துள்ளார். ‘டெஸ்ட்டிலேயே அதிரடியாக ஆடுகிறோம், ஒருநாள் போட்டி எம்மாத்திரம் என்று திமிராக ஆடுகிறார்களா இங்கிலாந்து அணியினர்’ என்கிறார் சேவாக்.

2019-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வென்றதைத் தவிர, இங்கிலாந்து எப்போதும் ஒருநாள் போட்டிகளில் ஒரு சாதாரண அணியாகவே இருந்து வருகிறது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து முன்கூட்டியே வெளியேறும் நிலையில், இங்கிலாந்து 50 ஓவர் உலகக் கோப்பையில் கடைசி 8 முறைகளில் ஒருமுறை மட்டுமே அரையிறுதிக்கு வந்துள்ளது என்று சேவாக் சுட்டிக்காட்டினார். இதற்கான காரணமாக சேவாக் கூறியிருப்பது என்னவெனில், “அணியை அடிக்கடி மாற்றுவது மற்றும் வீரர்களை செட்டில் ஆக விடாமல் செய்வது ஆகியவற்றுக்காக இங்கிலாந்து கொடுத்து வரும் விலையே தோல்விகள்” என்றார் சேவாக்.

இங்கிலாந்து 2015 உலகக் கோப்பையில் முன்கூட்டியே வெளியேறிய பிறகு, இயான் மோர்கன் மூலம் தீவிர அணுகுமுறை மாற்றத்துக்கு உட்பட்டது. உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது, 2019 ODI உலகக் கோப்பை மற்றும் 2022 T20I உலகக் கோப்பையை வென்றது. அவர்கள் சில பெரிய தோல்விகளை சந்தித்த பிறகு டெஸ்டில் தலைமை மாற்றத்தை அடைந்து இன்று டெஸ்ட் அணிகளில் ஆதிக்க அணியாக உள்ளனர்.

இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது போல் இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளில் உற்சாகமாக இல்லை என்றும், இந்த தவறான எண்ணம் அவர்களை தற்போது இருக்கும் சூழ்நிலையிலும் அந்நியப்படுத்தியுள்ளது என்றும் சேவாக் மேலும் கூறினார். முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதன் விவரம் வருமாறு: “

இங்கிலாந்தின் 50 ஓவர்கள் ஒருநாள் கிரிக்கெட் அணி படுமோசமாக உள்ளது. 2019 உலகக் கோப்பையை தங்கள் மண்ணில் வென்றதைத் தவிர அவர்கள் கடந்த 8 உலகக் கோப்பைகளில் ஒருமுறைதான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். நிலையான அணியாக இல்லாமல் அடிக்கடி அணியை மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

வீரர்களை எடுப்பதும் பெஞ்சில் அமரவைப்பதுமாக இருக்கின்றனர். டெஸ்ட் போட்டிகளைப் போலவே ஒருநாள் போட்டிகளிலும் நாம் தான் உற்சாகமான வீரர்கள், நாம்தான் உத்வேகத்துடன் ஆடுகிறோம் என்ற தவறான எண்ணத்தில் ஆடுகின்றனர். இத்தகைய எண்ணம்தான் அவர்களது சரிவுக்குக் காரணம்” என்று சேவாக் தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Share this story