இந்திய அணி வெற்றி பெற, குடும்பத்தோடு சேர்ந்து வாழ்த்து தெரிவித்த திலக் வர்மா.!

By 
tilak

நியூயார்க்கில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 8ஆவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மேலும், ஷிவம் துபே, அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 7 போட்டிகளிலும் இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது முதல் முறையாக இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் மோதுகின்றன.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

அயர்லாந்து:

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பல்பிர்னி, லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கர்டிஸ் காம்பெர், ஜார்ஜ் டாக்ரெல், கெராத் டெலானி, மார்க் அடையர், பேரி மெக்கர்தி, ஜோஷுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்.

அயர்லாந்து அணிக்கு எதிராக ரோகித் சர்மா விளையாடிய 3 டி20 போட்டிகளில் 149 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 97 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 12 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடங்கும். இதுவரையில் ரோகித் சர்மா விளையாடிய 151 டி20 போட்டிகளில் 3974 ரன்கள் எடுத்துள்ளார்.

இன்னும் 26 ரன்கள் எடுத்தால் 3ஆவது கிரிக்கெட் வீரராக 4000 ரன்களை கடந்து சாதனை படைப்பார். இதுவே ரோகித் சர்மா 37 ரன்களுக்கு அதிகமாக எடுத்தால் டி20 உலகக் கோப்பையில் 1000 ரன்களை கடந்த 3ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.

மேலும், ரோகித் சர்மா விளையாடிய 472 சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 597 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசினால் சர்வதேச டி20 போட்டியில் 600 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இந்தப் போட்டியின் மூலமாக ரோகித் சர்மா 40ஆவது டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுகிறார். இதன் மூலமாக முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் 40 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்னதாக வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் 8 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ளார்.

ரோகித் சர்மா மட்டுமே 9ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறார். தற்போது நடைபெற்று வரும் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றால் எம்.எஸ்.தோனியின் 41 வெற்றி சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார். இதற்கு முன்னதாக ரோகித் சர்மா கேப்டனாக விளையாடிய 54 டி20 போட்டிகளில் 41 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் மட்டுமின்றி இந்திய அணியானது டி20 உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெற வேண்டி, இந்திய அணியின் வீரரான திலக் வர்மா தனது குடும்பத்துடன் இணைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

Share this story