இன்று 163 நாடுகள் பங்கேற்கும் பாராஒலிம்பிக் : மாரியப்பனுக்கு பதில், தேக் சந்த் கொடியேந்துகிறார்

By 
 Today, 163 countries are participating in the Paralympic Games Tek Chand flags off in response to Mariappan

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும், பாராஒலிம்பிக் போட்டி நடத்தப்படும்.

163 நாட்டின் மாற்றுத்திறனாளிகள் :

கொரோனா பரவல் காரணமாக, ஓராண்டு தள்ளி வைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி முதல் கடந்த 8-ந்தேதி வரை நடந்தது.  

இந்நிலையில், மாற்று திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி, டோக்கியோவில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை நடக்கிறது.

இதில், 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்று திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்ட இருக்கிறார்கள். வீரர்களின் உடல் பாதிப்புக்கு தகுந்தபடி வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். 

வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், கால்பந்து (5 பேர் அடங்கிய அணி), துப்பாக்கி சுடுதல், வலுதூக்குதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, தேக்வாண்டோ உள்பட 22 விளையாட்டுகளில், 540 போட்டிகள் நடைபெறுகிறது.

இந்தியா சார்பில், 54 வீரர்கள் :

டோக்கியோவில் அரங்கேறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிக வீரர்களை கொண்ட இந்திய அணி கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். 

வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், வலுதூக்குதல், துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, கனோயிங் (சிறிய வகை துடுப்புப் படகு) ஆகிய 9 போட்டிகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஒலிம்பிக் போட்டியைப் போல் பாராஒலிம்பிக் போட்டியையும் நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில், ஜப்பான் பேரரசர் நருஹிடோ கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். 

நிர்வாக அறிவுறுத்தல் :

தொடக்க விழா அணிவகுப்பில், இந்திய அணி சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என மொத்தம் 11 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்திய அணிக்கு தமிழக வீரர் மாரியப்பன் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் என முதலில் அறிவிக்கப்பட்டது.

எனினும், கொரோனா பாதித்த வெளிநாட்டுப் பயணி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், தமிழக வீரர் மாரியப்பன் ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்த உடன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. எனினும், தொடக்க நிகழ்ச்சியில் மாரியப்பனை கலந்து கொள்ள செய்ய வேண்டாம் என நிர்வாக கமிட்டி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தேக் சந்த் :

இதனால், டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில்,  மாரியப்பனுக்கு பதில் தேக் சந்த் இந்திய கொடியை ஏந்தி செல்கிறார். 

அவரைத்தவிர வினோத் குமார் (வட்டு எறிதல்), ஜெய்தீப் குமார், சகினா காதுன் (வலுதூக்குதல்) ஆகிய வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து செல்கிறார்கள்.

Share this story