டுடே ஐபிஎல் 'வாத்தி' : அதிரடி வெற்றியுடன் வாணவேடிக்கை ஏத்தி; கோலி, டூ பிளசிஸ் ஆட்டம் ஆத்தி...

iplc4

16-வது ஐபிஎல் தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் இஷன் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் இஷன் கிஷன் 10 ரன், ரோகித் 1 ரன், அடுத்து களம் இறங்கிய கேமரூன் க்ரீன் 5 ரன், சூர்யகுமார் யாதவ் 15 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் அந்த அணி 48 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து களம் இறங்கிய திலக் வர்மா மற்றும் நேகால் வதேரா ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் அதிரடியாக ஆடிய வதேரா 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து திலக் வர்மாவுடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார்.

இதில் டேவிட் 4 ரன்னில் வீழ்ந்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 32 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதிவரை களத்தில் நின்ற திலக் வர்மா 46 பந்தில் 84 ரன்கள் குவித்தார். இறுதியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது.

பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக கரண் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் கேப்டன் பாப் டூ பிளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். தொடக்கம் முதலே சீராக ரன் குவிக்கத் தொடங்கிய இந்த ஜோடி, அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தியது.

இந்த ஜோடியில் தொடர்ந்து அதிரடி காட்டிய டூ பிளசிஸ் 29 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 38 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். எதிரணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டியது.

தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய இந்த ஜோடியில் டூ பிளசிஸ் 43 பந்துகளில் 73 ரன்கள் குவித்து கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்ததாக விராட் கோலியுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். முடிவில் தொடர்ந்து அதிரடி காட்டிய விராட் கோலி 73 (43) ரன்களும், மேக்ஸ்வெல் 12 (3) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் பெங்களூரு அணி 16.2 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அர்ஷத் கான் மற்றும் கேமரான் கிரின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் மும்பை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி, லீக் சுற்றில் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.
 

Share this story