அசாத்திய தைரியம், போராளி, ஹீரோன்னா முகமது ரிஸ்வான்தான் : வைரலாகிறது நிகழ்வு

Unbelievable Courage, Fighter, Heronna Mohammed Rizwan Viralizing Event

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்பாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் முகமது ரிஸ்வான்.

 ஆஸ்திரேலியாவிற்கு எதிராக, முதலில் பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 

அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 19 ஓவரிலேயே இலக்கை துரத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் 19-வது ஓவரில், கடைசி மூன்று பந்துகளில் அடுத்தடுத்து 3 சிக்ஸ் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். இதனால், நாக் அவுட் சுற்றில் பாகிஸ்தான் வெளியேறியது.

ஹீரோ :

பாகிஸ்தான் சூப்பர் 12 சுற்றில் சிறப்பாக விளையாடியது. தற்போது, அந்த அணியின் ஹீரோவாகப் பார்க்கப்படுபவர் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வான் ஆவார். அவர் 6 போட்டிகளில் 281 ரன்களை விளாசியுள்ளார். பாபர் அசாமுக்குப் பிறகு (303 ரன்கள்) அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் இருக்கிறார் ரிஸ்வான்.

பாகிஸ்தான் அணியின் வெற்றிகரமான தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு 2 நாட்கள் முன்பாக புளூ காய்ச்சலினால்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், நேற்று களத்திற்குள் வந்து பிரமாதமான இன்னிங்ஸை ஆடியதை, ஹீரோ என்று வர்ணித்துள்ளார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புளூ காய்ச்சலுக்கு அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். 

ஆனால் நேற்று இறங்கி 52 பந்துகளில் 67 ரன்களை 4 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் எடுத்தார் ரிஸ்வான். துபாய் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

ரிஸ்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த படத்தையும் பகிர்ந்த சோயிப் அக்தர், “உங்களால் நம்ப முடிகிறதா, இவர் இன்று நாட்டுக்காக ஆடி பெரிய பங்களிப்பு செய்ததை? கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பெரிய மரியாதை ஏற்படுகிறது. ஹீரோ ரிஸ்வான்” என்று பதிவிட்டுள்ளார்.

போராளி :

போட்டிக்கு முன்பாக ரிஸ்வான் ஆடுவதே சந்தேகமாகத்தான் இருந்தது. நுரையீரல் பிரச்சினையினால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

மேத்யூ ஹைடனும் இதை உறுதி செய்து, “முகமது ரிஸ்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நுரையீரல் சிகிச்சை பெற்றார். அவர் ஒரு போராளி. இந்தத் தொடரில் பிரில்லியண்ட் ஆக ஆடினார். அவரிடம் அசாத்திய தைரியமுள்ளது” என்று கூறியுள்ளார்.

ரிஸ்வானின் இந்த உடல் நிலை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அவரது தைரியமான இன்னிங்ஸ், தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது. 

ரிஸ்வான், தற்போது பாகிஸ்தானின் புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.
*

Share this story