250 ஐபிஎல் போட்டி : விராட்கோலியின் இமாலய சாதனை..

By 
virat250

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 62ஆவது லீக் போட்டியில் விளையாடியதன் மூலமாக, ஒரே அணிக்காக 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்று வரும் 62ஆவது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் ரிஷப் பண்டிற்கு விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில், டெல்லி கேபிடல்ஸ் கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டார்.

இந்தப் போட்டி விராட் கோலியின் 250ஆவது ஐபிஎல் போட்டியாகும். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே அணிக்காக 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்னதாக எம்.எஸ்.தோனி 263 ஐபிஎல் போட்டியிலும், ரோகித் சர்மா 256 ஐபிஎல் போட்டியிலும், தினேஷ் கார்த்திக் 250 ஐபிஎல் போட்டியிலும் விளையாடியிருக்கின்றனர். ஆனால், இவர்கள் ஒரே அணிக்காக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்‌ஷர் படேல் பவுலிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் டெல்லி அணியில் ரிஷப் பண்டிற்கு பதிலாக குமார் குஷாக்ரா இடம் பெற்றார். ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதையடுத்து விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் டூப்ளெசிஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய விராட் கோலி 27 ரன்களில் வெளியேறினார்.

அதன் பிறகு ரஜத் படிதார் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசி ரன்கள் குவிக்க, ஆர்சிபி ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதில், படிதார் 32 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 52 ரன்களில் ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் 41 ரன்களில் வெளியேறினார்.

அதன் பிறகு ரன் ரேட் குறைந்தது. மகிபால் லோம்ரார் 13 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 0, ஸ்வப்னில் சிங் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் கேமரூன் க்ரீன் 32 ரன்கள் எடுக்கவே ஆர்சிபி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் கலீல் அகமது, ரஷீக் தர் சலாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். குல்தீப் யாதவ், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இந்த போட்டி உள்பட இதுவரையில் 13 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி மொத்தமாக 661 ரன்கள் குவித்து அதிக ரன்களுக்கான ஆரஞ்சு கேப் வென்றுள்ளார். இந்த சீசனில் விராட் கோலி 5 அரைசதம், ஒரு அரைசதமும் அடித்துள்ளார். இதில் 55 பவுண்டரி, 30 சிக்ஸர்கள் அடங்கும்.

Share this story