ஐபிஎல் அரசு: 4-வது முறையாக 600 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை..

By 
viratji1

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2ஆவது போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த 6 போட்டிகளில் ஆர்சிபி வரிசையாக தோல்வி அடைந்து விமர்சனத்திற்கு உள்ளானது.

இதையடுத்து, நடந்த கடைசி 3 போட்டிகளிலும் ஆர்சிபி வரிசையாக ஹாட்ரிக் வெற்றி பெற்றது. இதுவரையில் விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இதுவரையில் நடந்த போட்டிகளில் படி விராட் கோலி 11 இன்னிங்ஸ் விளையாடி 542 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 4 அரைசதமும், ஒரு சதமும் விளாசியிருந்தார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 58ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்சர் உள்பட 92 ரன்கள் விளாசியுள்ளார்.

இதில், 92 ரன்கள் எடுத்ததன் மூலமாக 12 போட்டிகளில் விளையாடி 634 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலமாக இந்த சீசனில் முதல் வீரராக 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அதோடு, ஐபிஎல் கிரிக்கெட்டில் 4ஆவது முறையாக 600 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக கேஎல் ராகுல் 4 முறை 600 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

மேலும், கிறிஸ் கெயில் மற்றும் டேவிட் வார்னர் தலா 3 முறை 600 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். ஃபாப் டூப்ளெசிஸ் 2 முறை 600 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதுதவிர பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை கடந்துள்ளார்.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை கடந்துள்ளார். ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் 7897 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story