இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட்களில் இருந்து விராட்கோலி விலகல்: புஜாரா வருகிறாரா?

By 
tmtm

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார். சொந்தக் காரணங்களினால் விராட் கோலி முதல் 2 டெஸ்ட்களிலிருந்து விலகியுள்ளார். இதனை பிசிசிஐ இன்று அறிவித்தது.

“விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடுப்பு கேட்டுள்ளார். சொந்தக் காரணங்களினால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார்” என்று பிசிசிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேப்டன் ரோகித் ஷர்மா, பயிற்சியாளர் திராவிட், மற்றும் அணி நிர்வாகம், அணித்தேர்வாளர்களுடன் விராட் கோலி பேசியதாக பிசிசிஐ அறிக்கை தெரிவிக்கின்றது. எனவே விராட் கோலியின் பிரைவசியை ஊடகத்தாரும் ரசிகர்களும் மதிக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

விராட்கோலிக்கு பதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் மாற்று வீரர் தேர்வு செய்யப்படுவாரா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. சர்பராஸ் கான் நீண்ட காலமாகக் காத்திருக்கிறார். ரஞ்சி கோப்பைகளிலும் இந்தியா ஏ அணிக்காகவும் சிறப்பாக ஆடி வருகிறார். விரைவு கதியில் ரன்களை எடுத்து வருகிறார். ஆனால் இன்னும் அவரை அணித்தேர்வுக்குப் பரிசீலிக்கவில்லை என்பது பெரிய சர்ச்சையாகி வருகின்றது.

கடந்த ஞாயிறன்று ஹைதராபாத் வந்த கோலி இந்திய அணியினரின் பயிற்சி அமர்வில் பங்கேற்கவில்லை. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ஆடிய விராட் கோலி ஆப்கானுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியிலிருந்து சொந்தக் காரணங்களுக்காக விலகினார். முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் நடந்த வெள்ளைப்பந்து தொடரிலும் விராட் கோலி ஆடவில்லை. அப்போதும் சொந்தக் காரணங்களுக்காக இந்தியா வந்தார்.

விராட் கோலிக்கு மாற்று வீரர்களாக இந்த வீரர்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது. புஜாரா, ரஜத் படீடார், அபிமன்யூ ஈஸ்வரன், மற்றும் சர்பராஸ் கான். புஜாரா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் கடைசியாக இந்திய அணிக்காக ஆடினார். இந்த ஆண்டு ரஞ்சி தொடரில் அவர் ஜார்கண்ட் அணிக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்தார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக படீடார் மற்றும் சர்பராஸ் கான் நன்றாக ஆடினர். இந்தப் போட்டிகளில் சர்பராஸ் கான் அரைசதங்கள் எடுத்தார். டூர் கேமில் 96 ரன்களை விரைவு கதியில் எடுத்தார்.

ஏற்கெனவே ஸ்ரேயஸ் அய்யர், ஷுப்மன் கில் ஆகியோர் நடுவரிசையில் உள்ளனர், விக்கெட் கீப்பராக வேறு ஒருவர் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் கே.எல்.ராகுல் பேட்டராக மிடில் ஆர்டரை வலுப்படுத்துவார். இந்த 5 டெஸ்ட் போட்டிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியாகும். இப்போது அட்டவணையில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்தத் தொடரை வெல்ல வேண்டும் என்னும் போது விராட் கோலி விலகியிருப்பது பெரும் பின்னடைவுதான். இங்கிலாந்து தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களது பாஸ்பால் அணுகுமுறை பாகிஸ்தானில் எடுபட்டது. தொடரை வென்றனர். இந்தியாவில் எடுபடுமா என்பது தெரியவில்லை. ஆனால் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது ஸ்பின் திறமைகளும் மங்கி வருவதும் இந்திய அணிக்குக் கவலை அளிப்பதாகும்.

Share this story