5 ஆண்டுகளுக்கு பிறகு, ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வீரருக்கான விருது வென்று விராட்கோலி உலக சாதனை..

By 
virat record

2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதை விராட்கோலி 4ஆவது முறையாக வென்று அதிக முறை (10 முறை) ஐசிசி விருது வென்ற வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

ஆண்டு தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி, டி20 அணி மற்றும் டெஸ்ட் அணி, சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், டி20 வீரர், டெஸ்ட் வீரர் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கௌரவித்து வருகிறது. 

அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட்கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் விராட் கோலி 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1795 ரன்கள் குவித்துள்ளார். இதில், ஒரு விக்கெட் மற்றும் 19 கேட்சுகளும் அடங்கும். அதுமட்டுமின்றி 12 அரைசதங்களும், 5 சதங்களும் விளாசியுள்ளார். 

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 765 குவித்து உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 50 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்து புதிய அத்தியாயம் படைத்தார். தற்போது 35 வயதாகும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் தொடரில் இதுவரையில் 80 சதங்கள் விளாசியுள்ளார். 

இன்னும் 20 சதங்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து பார்மேட்டுகளிலும் மொத்தமாக 100 சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் விராட் கோலிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான விருதை 4ஆவது முறையாக விராட் கோலி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, 2012, 2017, 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருது வென்றார். 2018 ஆம் ஆண்டு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருது வென்றார். இதுவரையில் 292 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி, 13,848 ரன்கள் குவித்துள்ளார். இதில், 50 சதங்களும், 72 அரைசதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story