மினி ஏலத்தில் டார்கெட் செய்யப்பட்ட வீரர்கள் யார் யார்?: சிஎஸ்கே நிர்வாகி பேச்சு.. 

By 
cssk

ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் வரும் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், சிஎஸ்கே அணியானது பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், சிசாண்டா மகாளா உள்ளிட்ட 8 வீரர்களை விடுவித்தது. அம்பத்தி ராயுடு கடந்த சீசன் உடன் ஓய்வு பெற்றார்.

என்னும், 6 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. இதில், கெரால்டு கோட்ஸி, ஷாருக் கான் உள்ளிட்ட வீரர்களை ஏலம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகியோரையும் ஏலத்தில் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் சிஎஸ்கே அணியின் முதன்மை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன் கூறியிருப்பதாவது: 16 ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு வீரரை மட்டுமே சிஎஸ்கே டிரேட் செய்துள்ளது. அதே போன்று எந்த வீரரையும் சிஎஸ்கே அணி டிரேட் முறையில் விட்டுக் கொடுக்கவில்லை.

சில ஆண்டுகளாக அம்பத்தி ராயுடுவிற்காக டிரேட் செய்ய விரும்பினோம். ஆனால், அது நடக்கவில்லை. இந்த சீசனில் பென் ஸ்டோக்ஸை விடுவிப்பதா அல்லது தக்க வைப்பதா என்று ஆலோசனை நடந்தது. இது தொடர்பாக அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஏலத்தின் அதிக தொகையுடன் பங்கேற்க வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டார். நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட பேட் கம்மின்ஸ், டிராஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் ஏலத்திற்கான பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்திய இளம் வீரர்களையும் ஏலம் எடுக்க ஆவலாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Share this story