மனைவி தான் என்னுடைய உலகமே: டேவிட் வார்னர் நெகிழ்ச்சி..

By 
warner5

சிட்னியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற பிறகு பேசிய டேவிட் வார்னர், தனது மனைவி தான் தன்னுடைய உலகம் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 313 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 299 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 14 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், பாகிஸ்தான் 115 ரன்கள் மட்டுமே எடுத்து 130 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் டேவிட் வார்னர் 75 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 57 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடைய வந்த ஆஸ்திரேலியாவின் வார்னருக்கு பாகிஸ்தான் வீரர்கள் உள்பட அனைவரும் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

கடைசியாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்று கைப்பற்றியது. இந்த நிலையில் தான் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஓய்விற்கு பிறகு பேசிய வார்னர் கூறியிருப்பதாவது: என் பெற்றோருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தான் நான் இங்கு நிற்பதற்கு காரணம். அதேபோல் என் சகோதரர் ஸ்டீவின் காலடி தடங்களை பின்பற்றி தான் நான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். அவருக்கு பின் மனைவி கேண்டிஸ். எல்லா தருணங்களிலும் என்னுடன் இருந்தார். அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் கொண்டாட்டமாக இருந்துள்ளேன். அவர் தான் என் உலகமே என்று கூறியுள்ளார்.

Share this story