டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆடுவார்களா?: கங்குலி  விருப்பம்..

By 
t20cc

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்க வேண்டும். விராட் கோலியின் இருப்பும் முக்கியமானது” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்தப் போட்டி ஜூன் 29-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் நிறைவுபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்க வேண்டும் என கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “கண்டிப்பாக டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தான் கேப்டனாக இருக்க வேண்டும். அணியில் விராட் கோலியின் இருப்பும் முக்கியமானது. விராட் கோலி மிகச்சிறந்த வீரர், இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி20 போட்டியில் விளையாடினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது” என கங்குலி கூறியுள்ளார்.

14 மாத இடைவெளி: கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்திடம் அரையிறுதி தோல்வி இந்தியா தோல்வியடைந்தது. அது தான் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இறுதியாக விளையாடிய டி20 போட்டி. அதன்பிறகு கிட்டத்தட்ட 14 மாதங்களாக இருவரும் டி20 ஆட்டங்களில் விளையாடவில்லை. 

அடுத்து ஜனவரி 11-ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இருவரும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வு மூலம் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இருவரும் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் குறித்து கங்குலி புகழ்ந்துள்ளார். “இரண்டாவது டெஸ்டில் அவர் சிறப்பாக விளையாடினார். இது அவரது கேரியரின் ஆரம்பம். அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.
 

Share this story