முதல் போட்டியில் ஷிவம் துபே பங்கேற்பாரா? – சிஎஸ்கே அணிக்கு சோதனை மேல் சோதனை..

By 
shivam1

இந்தியாவில் வரும் 22 ஆம் தேதி ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சில வீரர்கள் காயம் காரணமாக விலகியிருக்கிறனர். சிலர்  தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர்.

அந்த வகையில், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடிய ஷிவம் துபே இந்த சீசனில் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 418 ரன்கள் குவித்தார். ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணியிலும் ஷிவம் துபே இடம் பெற்றார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஷிவம் துபெ இடம் பெற்று சிறப்பாக விளையாடினார்.

தற்போது சேப்பாக்கத்தில் பயிற்சியை மேற்கொண்டு வரும் சிஎஸ்கே அணியில் ஷிவம் துபே இணையவில்லை. ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சகார் ஆகியோர் ஏற்கனவே தோனியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இன்னும் ஓரிரு நாட்களில் சிஎஸ்கே அணியுடன் இணைய உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்து ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதிப் போட்டிக்கு முன்னதாக மும்பை அணியில் இடம் பெற்று விளையாடிய போது ஷிவம் துபேவிற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார்.

இதற்கிடையில் சென்னை வந்த ஷிவம் துபே, பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டார். மேலும், ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரையில் சிஎஸ்கே அணியுடன் இணைந்து தனது பயிற்சியை மேற்கொள்ளவில்லை.

இதன் காரணமாக சேப்பாக்கத்தில் தொடங்கும் முதல் போட்டியில் ஷிவம் துபே பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காயம் காரணமாக டெவோன் கான்வே அணியிலிருந்து விலகியுள்ளார். மேலும், சிஎஸ்கே அணியில் ரூ.1.80 கோடிக்கு ரச்சின் ரவீந்திரா ஏலம் எடுக்கப்பட்டார். இந்த தொடர் மூலமாக ரச்சின் ரவீந்திரா ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story