உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஒரு கேப்டனாக அதிக ரன்கள், சிக்ஸர்கள் விளாசி ரோகித் சர்மா சாதனை..

By 
rsrs4

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி தற்போது நடந்து வருகிறது. அகமதாபாத் மைதானத்தில் நடந்து வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், இருவரும் நிதானமாகவே ரன் கணக்கை தொடங்கினர். முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரோகித் சர்மாவிற்கு, மிட்செல் ஸ்டார்க் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தார். எனினும், அவுட் இல்லை. அந்த ஓவரில் மட்டும் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

ஹசல்வுட் வீசிய 2ஆவது ஓவரில் ரோகித் சர்மா அடுத்தடுத்து 2 பவுண்டரி விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. மூன்றாவது ஓவரின் முதல் பந்தை சுப்மன் கில் எதிர்கொண்டார். ஆனால், அந்த பந்திலேயே அவர் ஆட்டமிழக்க வேண்டியது. எனினு, தப்பித்துவிட்டார். அந்த ஓவரில் 5 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதையடுத்து தான் 4ஆவது ஓவரில் ரோகித் சர்மா ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் விளாசினார். ஸ்டார்க் வீசிய 5ஆவது ஓவரில் 2ஆவது பந்தில் கில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் கொடுத்த கேட்சை ஆடம் ஜம்பா பிடித்தார். கில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

பின்னர், விராட் கோலி களமிறங்கினார். இதில், அந்த ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா சிக்ஸர் அடித்தார். இந்த ஆண்டில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தவர்களில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் இணைந்து 1523 ரன்கள் எடுத்துள்ளனர். கடைசியாக கிளென் மேக்ஸ்வெல் வீசிய 10ஆவது ஓவரில் ரோகித் சர்மா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்த நிலையில், அடுத்த பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயற்சித்த நிலையில், டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

சர்மா 31 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் போட்டியில் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 0, 131, 86, 48, 46, 87, 4, 40, 61, 47 மற்றும் 47 என்று மொத்தமாக 597 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 அரைசதம், ஒரு சதம் அடங்கும். அதிகபட்சமாக 131 ரன்கள் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த உலகக் கோப்பையில் மட்டுமே அவர் 31 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 

மேலும், ஒரு கேப்டனாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அதிக ரன்களும், சிக்ஸர்களும் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஐசிசி இறுதிப் போட்டிகளில் ரோகித் சர்மா 237 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி 321 ரன்களுக்கு மேல் எடுத்து விளையாடி வருகிறார்.

ரோகித் சர்மாவைத் தொடர்ந்து களத்திற்கு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் இதற்கு முன்னதாக தொடர்ந்து 2 சதங்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 87 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

Share this story