உலக ஒலிம்பிக் திருவிழா : இந்திய தேசியக் கொடியுடன் மேரிகோம், மன்பிரீத் சிங்..

By 
World Olympic Festival Maricom, Manpreet Singh with Indian National Flag ..

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது. 

சமத்துவம் :

ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில், முதலில் அனைத்து நாடுகளின் அணிவகுப்பு நடைபெறுவது மரபாகும். 

போட்டிகளில் பங்கேற்கும் பெரும்பாலான விளையாட்டு வீரர்-வீராங்கனைகள், நாடு வாரியாக விளையாட்டரங்கினுள் அணிவகுத்து நுழைவார்கள். 

ஒவ்வொரு அணியிலும், முதலில் வரும் வீரர் தங்கள் நாட்டின் தேசியக்கொடியை ஏந்தி செல்வார். இது அவர்களுக்கு கிடைக்கும் கவுரவமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில், இந்தியா சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசியக்கொடிகளை ஏந்தி செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில், பஜ்ரங் புனியா தேசியக்கொடியை ஏந்திச் செல்ல உள்ளார். 

ஒவ்வொரு நாட்டின் அணி சார்பிலும், ஒருவர் மட்டுமே தேசியக் கொடி ஏந்திச் செல்வது வழக்கம். 

ஆனால், இந்தியா இந்த முறை பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேரை தேசியக்கொடியை ஏந்திச் செல்வதற்கு அனுமதி அளித்துள்ளது. 

115 பேர் :

2016-ல் ரியோ டிஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவின்போது, இந்திய அணி சார்பில் அபினவ் பிந்த்ரா தேசியக்கொடியை ஏந்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில், 63 வீரர்கள், 52 வீராங்கனைகள் என மொத்தம் 115 பேர் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். 

Share this story