1,072 பேருக்கு 1 லட்சத்து 87 ஆயிரம் அபராதம் : சென்னை மாநகராட்சி நடவடிக்கை
 

By 
ccc6

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரை தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 27.04.2023 முதல் 11.05.2023 வரை அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பெயர் பலகைகள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 1,072 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு ரூ.1,87,600 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை வருமாறு:-

திருவொற்றியூர்-8,500, மணலி-5,000, மாதவரம்-10,000, தண்டையார்பேட்டை-12,500, ராயபுரம்-18,000, திரு.வி.க. நகர்-10,500, அம்பத்தூர்- 9,800, அண்ணாநகர்-9,200, தேனாம்பேட்டை-15,000, கோடம்பாக்கம்-13,000, வளசரவாக்கம்-10,400, ஆலந்தூர்-11,700, அடையாறு-21,000, பெருங்குடி- 21,000, சோழிங்கநல்லூர்-12,000, மொத்தம்1072 பேருக்கு ரூ.1,87,600 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பெயர் பலகைகள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டுதலை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாகப் பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு காவல் துறையில் புகார் அளிக்கப்படும்.

மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டிகள் காணப்பட்டால், பொது மக்கள் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Share this story