10 இலவச எலெக்ட்ரிக் பஸ் இயக்கப்படுகிறது; எங்கே தெரியுமா?
 

By 
bus51

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் தற்போது 12 இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது. திருமலை பஸ் நிலையத்தில் இருந்து மலை பகுதி முழுவதும் பஸ் ஆங்காங்கே நிறுத்தி பக்தர்களை ஏற்றி இறக்கி செல்கின்றன.

தற்போது இயக்கப்படும் பஸ்கள் டீசலில் இயங்கி வருகின்றன. திருமலையில் அதிகாலை மாசு ஏற்படுவதை குறைக்க தேவஸ்தான அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி திருமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத பைகள் பிளாஸ்டிக் அல்லாத காகிதங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பைகள் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள மேகா என்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராக்ஸ்ட்ரக்சர் கிரீன்டெக் நிறுவனம் திருமலையில் இயக்குவதற்காக 10 எலெக்ட்ரிக் பஸ்களை தயாரித்துள்ளது. இதில் 5 பஸ்கள் திருமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் 5 பஸ்கள் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த பஸ்கள் 25 பேர் அமரக்கூடிய வகையிலும் 25 பேர் நின்று பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் 2 புறமும் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா மற்றும் பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்பு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் திருமலைக்கு புதிதாக வரும் பக்தர்கள் தங்கள் இறங்க வேண்டிய இடத்தை கண்டறிந்து இறங்கிக்கொள்ள இந்த வசதி உதவியாக இருக்கும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருகிற 27-ந்தேதி காலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுபாரெட்டி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார். ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த இலவச பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதியில் நேற்று 58,955 பேர் தரிசனம் செய்தனர். 25,113 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.2.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
 

Share this story