10 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் : வங்கிச்சேவைகள் முடங்கின..

By 
10 lakh employees on strike Banking services paralyzed

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை, தனியார் மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கு வங்கி பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த எதிர்ப்பையும் மீறி வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

நடப்பு பாராளுமன்ற தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும் என வங்கி ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

பேச்சுவார்த்தை தோல்வி :

இது தொடர்பாக கூடுதல் தொழிலாளர் ஆணையர், இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள், நிதித்துறை பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

வேலை நிறுத்தம் :

இதையடுத்து, நாடு முழுவதும் வங்கிகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஊழியர்கள் முடிவு செய்தனர்.

இதன்படி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது. 

தமிழகத்தில் சுமார் 90 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளை மேலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் இன்று வேலைக்கு செல்லவில்லை.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மட்டும் 6,500 வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. நாடு முழுவதும் 1 லட்சத்து 18 ஆயிரம் வங்கிகள் செயல்படவில்லை.

கடும் பாதிப்பு :

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, வங்கி வாடிக்கையாளர்கள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணம் செலுத்த முடியாமலும், முதிர்வடைந்த பணத்தை எடுக்க முடியாமலும், காசோலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமலும் பொதுமக்கள், பெரும் தொழில் அதிபர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இன்று தொடங்கிய வேலைநிறுத்தம் நாளையும் நீடிக்கும் என வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், வங்கி பணிகளில் மேலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கருவூல கணக்குகள் முடங்கின:

வங்கிகளில் கணக்கு வைத்துள்ள தனி நபர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிப்பை சந்தித்து இருக்கும் வேளையில், அரசின் கருவூல கணக்குகளும் முடங்கி உள்ளன. இதனால், அரசு பணிகளிலும் சுணக்கம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும் தொழில் அதிபர்கள் வங்கி பணபரிமாற்றங்கள் மேற்கொள்வதன் மூலமே, தங்களது ஏற்றுமதி- இறக்குமதியை மேற்கொண்டு வருகிறார்கள். 

காசோலைகள் வங்கிகளில் முடங்கி கிடப்பதால் இந்த ஏற்றுமதி - இறக்குமதி தொழில்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.

அதே நேரத்தில், நடுத்தர மக்கள் வங்கி வேலை நிறுத்தத்தால் பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள். 

குறிப்பிட்ட தேதியில் பணம் கிடைக்கும் என்று நம்பி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தவர்களும், தங்களது வேலைகளை 2 நாட்கள் தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Share this story