சென்னையில், நிதி நிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி : ஏமாந்தவர்கள் முற்றுகை

arrest21

சென்னை வானகரம் மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரசேகர் (வயது 45). இவர் நிதி நிறுவனம் நடத்தி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் தொழில் நடத்தி வந்தார். இவர் தனது நிதி நிறுவனத்துக்காக சென்னையில் 5 இடங்களில் அலுவலகங்களையும் தொடங்கினார்.

அதில், அலுவலர்களை வேலையில் வைத்து, கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டினார். மேலும் ரூ.1 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்றும், பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். இதை உண்மை என்று நம்பிய பொதுமக்கள் பலர் சந்திரசேகரின் நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர்.

இதனால், அவரிடம் கோடி கோடியாக பணம் குவிந்தது. அதை வைத்து குறிப்பிட்ட காலம் மட்டும் ரூ.1 லட்சம் கட்டியவர்களுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் கொடுத்தார். சில மாதங்கள் கழித்து சிலருக்கு பணத்தை கொடுக்கவில்லை. இதையடுத்து பொது மக்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்தை அவரிடம் கேட்டனர். ஆனால் அவர் முதலீடு செய்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக அவர் பொதுமக்களிடம் பணம் பெற்று ரூ.100 கோடி மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் பணத்தை இழந்த பலர் ஏற்கனவே சந்திரசேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். வழக்கில் சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பிறகு சந்திரசேகர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். சந்திரசேகர் கைது செய்யப்பட்ட பிறகு சென்னையில் அவர் நடத்திய நிதி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பணம் கட்டி ஏமாந்தவர்கள் அவரிடம் இருந்து பணத்தை எப்படி திரும்ப பெறுவது என்பது தெரியாமல் தவித்தனர்.

இந்நிலையில் சந்திரசேகர் சென்னை வானகரத்தில் உள்ள வீட்டுக்கு வந்திருப்பதாக தகவல் பரவியது. இதனால் பணம் கட்டி ஏமாந்த பெண்கள், பட்டதாரிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை வானகரத்தில் உள்ள சந்திரசேகரின் வீட்டு முன்பு குவிந்தனர். திடீரென்று அவர்கள் சந்திரசேகரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சந்திரசேகரின் வீட்டின் அருகில் வசித்தவர்கள் சந்திரசேகர் வீட்டை பூட்டி விட்டு ஏற்கனவே தலைமறைவாகிவிட்டார் என்று தெரிவித்தனர். ஆனாலும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. இதுபற்றி மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மேலும் மோசடி செய்த தொகை ரூ.100 கோடி என்பதால் இந்த வழக்கு ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே சந்திரசேகர் வசிக்கும் பகுதியில் அவரது வீட்டை சுற்றி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், "நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த நிறுவனர் சந்திரசேகர், மக்களிடம் சுருட்டிய பணத்தை திருப்பி கொடு, எங்களுக்கு தண்ணீர் காட்டாதே... ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..." என்று கூறப்பட்டு இருந்தது.
 

Share this story