அங்கன்வாடி ஊழியர்கள் 1,224 பேர் கைது..

By 
ankan

விருதுநகரில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 1,224 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பாண்டியம்மாள், சிஐடியு மாவட்ட செயலாளர் தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின் போது, அங்கன்வாடிகளில் கேமரா பொருத்தும் திட்டத்தை கைவிட கோரியும், குல்லூர் சந்தை அங்கன்வாடி மையத்தில் பொருத்தப்பட்ட கேமராவை அகற்றக் கோரியும் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

கேமரா பொறுத்தும் திட்டத்தை கைவிடவில்லை எனில் விருதுநகருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். அதையடுத்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். கூடுதல் எஸ்.பி. சோம சுந்தரம், டிஎஸ்பி பவித்ரா தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் 1,224 பேரை கைது செய்தனர்.

Share this story