போலீஸ்போல் நடித்து ரூ.1½ கோடி துணிகர கொள்ளை..

By 
robbery2

ஆந்திர மாநிலம், பப்பட்டலா பகுதியை சேர்ந்தவர்கள் சுபாராவ், ரஹ்மான். நகை வியாபாரிகள். இவர்கள் அடிக்கடி சென்னை சவுகார்பேட்டையில் உள்ள குறிப்பிட்ட நகை வியாபாரியிடம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நகைகள் வாங்கிச்செல்வது வழக்கம்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுகார்பேட்டையில் உள்ள மொத்த வியாபாரியிடம் நகை ஆர்டர் கொடுத்து இருந்தனர். இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை வியாபாரிகள் சுபாராவ், ரஹ்மான் ஆகியோர் நகைக்கு கொடுப்பதற்காக ரூ.1 கோடியே 40 லட்சம் ரொக்கத்தை பையில் வைத்துக்கொண்டு சென்னை வந்தனர்.

அவர்கள் சென்ட்ரலில் இருந்து சவுகார்பேட்டை நோக்கி அதிகாலை 3.30 மணியளவில் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். யானைக்கவுனி, துளசிங்கம் தெரு-வீரப்பன் தெரு சந்திப்பில் வந்தபோது திடீரென ஒரு கார் ஆட்டோவை வழிமறித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 3 வாலிபர்கள் தாங்கள் போலீசார், உங்களை சோதனை செய்ய வேண்டும் என்று சுபாராவ், ரஹ்மான் ஆகியோரிடம் தெரிவித்தனர். அவர்கள் கையில் லத்தி மற்றும் கைவிலங்கு ஆகியவை வைத்து இருந்தனர்.

இதனால் வியாபாரிகள் சுபாராவ், ரஹ்மானுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. 3 வாலிபர்களும் வியாபாரிகளின் பையை சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்டனர். உடனே அவர்கள் வியாபாரிகள் சுபாராவ், ரஹ்மானை தாக்கி கீழே தள்ளினர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.1 கோடியே 40 லட்சம் ரொக்கத்தை பறித்து அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.

இதனால் நகை வியாபாரிகள் சுபா ராவ், ரஹ்மான் மற்றும் ஆட்டோ டிரைவர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து யானைக்கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதனை வைத்து போலீஸ்போல் நடித்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வியாபாரிகள் நகை வாங்க வருவதை நன்கு அறிந்த கொள்ளைகும்பல் அவர்களை பின்தொடர்ந்து வந்து பணத்தை பறித்து சென்று உள்ளனர். அவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

கொள்ளையர்கள் ஆந்திராவில் இருந்தே வியாபாரிகளை பின்தொடர்ந்து வந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நகை வியாபாரிகளிடம் ரூ.1 கோடியே 40 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this story