2 பெண் குழந்தைகள் ரூ. 2 லட்சம் : விற்பனை செய்த தாய்..
 

By 
2 girls Rs. 2 lakh The mother who sold ..

கணவர் பிரிந்து சென்றதால், வறுமையின் காரணமாக, குழந்தை கருவில் இருக்கும் போதே, விற்பதற்கு விலை பேசப்பட்ட சம்பவம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி தேவி(வயது 27). இவர்களுக்கு தனுஷியா(2) என்ற மகள் உள்ளார்.

கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

2 வயது குழந்தை, ரூ.30,000 :

இந்நிலையில், 3 மாத கர்ப்பிணியாக இருந்த தேவி கடந்த மார்ச் மாதம் நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே மயிலப்புரம் மேட்டுத்தெருவில் வசிக்கும் தனது உறவினரான வியாகம்மாள் மேரி வீட்டுக்கு வந்துள்ளார்.

குழந்தைகளை வளர்க்க முடியாது என்பதால் குழந்தை தனுஷியாவை யாருக்காவது விற்றுவிட வேண்டும் என்று தேவி கூறி உள்ளார்.

இதையடுத்து வியாகம்மாள் மேரி உதவியுடன் முக்கூடலை சேர்ந்த ஜான் எட்வர்ட்-அற்புதம் தம்பதிக்கு ரூ.30 ஆயிரத்துக்கு தனது 2 வயது குழந்தை தனுஷியாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவி விற்றுவிட்டார்.

மேலும், பிரசவம் பார்க்க செலவாகும் என்பதால், தனது வயிற்றில் வளரும் 2-வது குழந்தையையும் தேவி விற்க முடிவு செய்தார். 

பத்திரம் :

இதையடுத்து, அதே பகுதியில் வசிக்கும் மார்க்ரெட் தீபா என்பவரின் உதவியுடன் சுரண்டை அருகே உள்ள வி.கே.புதூரில் வசிக்கும் ஜெபஸ்டின்-அமலா பாத்திமா தம்பதியை நாடி உள்ளனர்.

பிரசவம் வரை ஆகும் ஆஸ்பத்திரி செலவை பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை பெற்ற பின்னர் ரூ.1½ லட்சம் தர வேண்டும் என்று இரு தரப்பினரும் உடன்பாடு செய்து ஒரு பத்திரத்தில் எழுதிக்கொண்டனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரண்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தேவிக்கு பிரசவம் ஆகி உள்ளது. 

ஏற்கனவே பேசியபடி ரூ.1½ லட்சத்தை தேவியிடம் கொடுத்துவிட்டு, ஜெபஸ்டின் குழந்தையை வாங்கிக் கொண்டார். தொடர்ந்து தேவி மயிலப்புரத்திலேயே வசித்து வந்தார்.

தேவியின் முதல் குழந்தையை ரூ.30 ஆயிரத்திற்கு வியாகம்மாள் மேரி விற்று கொடுத்துள்ளார். 

ஆனால் 2-வது குழந்தை ரூ.1½ லட்சத்திற்கு விற்கப்பட்டது. இதனால், வியாகம்மாள் மேரி முதல் குழந்தையை கூடுதல் பணத்திற்கு விற்றுவிட்டு, தனக்கு பணம் தராமல் ஏமாற்றியதாக தேவி எண்ணினார். 

புகார் :

இதையடுத்து தேவி, தனது உறவினர் ஒருவரிடம் இதுகுறித்து செல்போனில் பேசி உள்ளார். அந்த நபர் அந்த செல்போன் பேச்சை பதிவு செய்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு அனுப்பி விட்டார்.

இதுகுறித்து, தகவல் அறிந்த நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் முக்கூடல் போலீசில் புகார் அளித்தனர். 

வழக்குப்பதிவு :

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தேவி குழந்தைகளை விற்றது தெரியவந்தது.

இதில் தொடர்புடைய தேவி, வியாகம்மாள் மேரி உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், விற்கப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டு, குழந்தைகள் சரணாலயத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

Share this story