சென்னையில், இன்றுமுதல் 200 நிரந்தர தடுப்பூசி முகாம்கள் : மாநகராட்சி தகவல்

By 
200 permanent vaccination camps in Chennai from today Corporation Information

சென்னை மாநகராட்சி சார்பில், 15 மண்டலங்களில், 45 தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டு வந்தன. 

மண்டலத்திற்கு 3 முகாம்கள் என்ற அடிப்படையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், சுகாதார நிலையங்களில் இந்த முகாம்கள் இயங்கின.

இதுதவிர, 16 நகர்ப்புற சுகாதார மையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டன. 

மாநகராட்சி திட்டம் :

தினமும் சராசரி 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த வாரம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

ஒரே நாளில் 200 வார்டுகளில் 400 இடங்களில் நடந்த முகாம்கள் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

3-வது அலை தாக்கத்திற்கு முன்பாக, சென்னையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில், முகாம்களை கூட்ட மாநகராட்சி திட்டமிட்டது.

அதன் அடிப்படையில், சென்னையில் 200 வார்டுகளிலும், நிரந்தர தடுப்பூசி முகாம்களை அமைக்க மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி ஏற்பாடு செய்தார்.

இதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. 

மாற்று இடங்கள் தேர்வு :

பள்ளிகள் திறக்கப்பட்டதால், பள்ளிகளில் செயல்பட்ட முகாம்கள் மூடப்பட்டன. அதற்கு பதிலாக, மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்தன. 200 வார்டுகளிலும், வார்டுக்கு ஒரு நிரந்தர தடுப்பூசி முகாம் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு சொந்தமான சுகாதார நிலையங்கள், மினி கிளினிக் போன்றவற்றில் இந்த முகாம்கள் செயல்படுகின்றன. 

ஒவ்வொரு பகுதியிலும் தடுப்பூசி முகாம்கள் செயல்படுவதால், தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.

Share this story