2,000 பெண் ஊழியர்கள் சாலை மறியல் : கலெக்டர் பேச்சுவார்த்தை..

By 
2,000 female employees block the road Collector talks ..

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இவர்கள், பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

வாந்தி-மயக்கம் :

இதற்கிடையில், பெண் ஊழியர்கள் தங்கி இருந்த விடுதியில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்துள்ளது. அந்த உணவை சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனால், சில பெண்கள் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. அவர்களின் நிலை என்ன என்று தனியார் செல்போன் உதிரி பாகம் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சாலை மறியல் :

இந்நிலையில், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 8 பெண்களின் நிலை என்ன ஆனது என்று தெரியாத காரணத்தால், நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு 12 மணியளவில் திரண்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பெண்கள் 10 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால், சென்னை-பெங்களூரு சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களை சமாதானப்படுத்தி, போக்குவரத்தை சரிசெய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். 

ஆட்சியர் பேச்சுவார்த்தை :

இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

அவர்களிடம் ஆட்சியர் ஆர்த்தி, “2 பெண்கள் (கஸ்தூரி, ஐஷ்வர்யா) இறந்ததாக வெளியான தகவல் வதந்தி. 2 பெண் தொழிலாளர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது மயங்கிய நிலையிலுள்ள வீடியோ, தவறாக பரப்பப்படுகிறது' எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, 12 மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
*

Share this story