தீ விபத்தில் 26 பேர் பலி : ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி இரங்கல்..
 

By 
fire1

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, நேற்று மாலை 3 மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 20 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

கட்டிடத்தில் இருந்து சுமார் 50 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. 

மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 

இதுதொடர்பாக டெல்லி தீயணைப்பு சேவை துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் சவுத்ரி கூறுகையில், '3 மாடி வணிகக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர்'. என்று அவர் தெரிவித்தார். 

ஜனாதிபதி இரங்கல் :

இது தொடர்பாக, டெல்லி தீயணைப்புத் துறைத் தலைவர் அதுல் கார்க் கூறுகையில், 

'தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடந்து வருவதாகவும், டெல்லி தீயணைப்பு சேவைகள் 27 தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளன என்றும் கார்க் கூறினார். 

இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தனது டுவிட்டரில், 'டெல்லியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்' என பதிவிட்டுள்ளார். 

பிரதமர் மோடி :

இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது டுவிட்டரில், 'டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிர் இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. 

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்' என பதிவிட்டுள்ளார்.
*

Share this story